3536
இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும் 

இடர்களும் துன்பமும் எல்லாம்
பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால் 

புலையனேன் பொருட்டல இதுநின்
மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய 

வகுத்தனன் அடியனேன் தனக்கே
எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும் 

இடரும்மற் றிலைஇலை எந்தாய்   
3537
என்னள விலையே என்னினும் பிறர்பால் 

எய்திய கருணையால் எந்தாய்
உன்னுறு பயமும் இடருமென் தன்னை 

உயிரொடும் தின்கின்ற தந்தோ
இன்னும்என் றனக்கிவ் விடரொடு பயமும் 

இருந்திடில் என்உயிர் தரியா
தன்னையும் குருவும் அப்பனும் ஆன 

அமுதனே அளித்தருள் எனையே   
  இருக்கில் - பி இரா பதிப்பு, 
3538
பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப் 

பற்றொடு வினையும்ஆ ணவமும்
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது 

கருத்திலே இனிஒரு கணமும்
வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன் 

மெய்யருள் அளித்திடல் வேண்டும்
உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல் 

உயிர்விடு கின்றனன் இன்றே   
3539
ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த 

அடைவைஉள் நினைத்திடுந் தோறும்
வெய்யதீ மூட்டி விடுதல் ஒப் பதுநான் 

மிகஇவற் றால்இளைத் திட்டேன்
வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க 

வசமிலேன் இவைஎலாம் தவிர்த்தே
உய்யவைப் பாயேல் இருக்கின்றேன் இலையேல் 

உயிர்விடு கின்றனன் இன்றே  
  விடுத்தல் - முதற்பதிப்பு, பொ சு,ச மு க, பி இரா பதிப்பு 
3540
பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப் 

பகைஎலாம் பற்றறத் தவிர்த்தே
நயந்தநின் அருளார் அமுதளித் தடியேன் 

நாடிஈண் டெண்ணிய எல்லாம்
வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது 

விண்ணப்பம் நின்திரு உளத்தே
வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க 

வள்ளலே சிற்சபை வாழ்வே   
  அருளாம் - ச மு க பதிப்பு