3541
என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன் 

இசைத்தவிண் ணப்பம்ஏற் றருளி
உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள் 

உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே
நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம் 

நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும்
மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே 

வள்ளலே சிற்சபை வாழ்வே   
3542
பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும் 

பற்றறத் தவிர்த்தருள் இனிநான்
தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம்

தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும் 

பொற்சபை அண்ணலே கருணை
வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே 

வள்ளலே சிற்சபை வாழ்வே   
  வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ சு, சமுக பதிப்பு 

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 மாயையின் விளக்கம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3543
திடுக்கற எனைத்தான் வளர்த்திடப் பரையாம்

செவிலிபாற் சேர்த்தனை அவளோ
எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள்

என்செய்வேன் இன்னும்என் னிடைப்பால்
மடுக்கநற் றாயும் வந்திலள் நீயும்

வந்தெனைப் பார்த்திலை அந்தோ
தடுக்கருங் கருணைத் தந்தையே தளர்ந்தேன்

தனையனேன் தளர்ந்திடல் அழகோ   
3544
தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்

தாய்கையில் கொடுத்தனை அவளோ
வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று

மாயமே புரிந்திருக் கின்றாள்
கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்

கேட்பதற் கடைந்திலன் அந்தோ
உளந்தரு கருணைத் தந்தையே நீயும்

உற்றிலை பெற்றவர்க் கழகோ   
3545
தாங்கஎன் தனைஓர் தாய்கையில் கொடுத்தாய்

தாயவள் நான்தனித் துணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள்

சூதையே நினைத்திருக் கின்றாள்
ஓங்குநற் றாயும் வந்திலாள் அந்தோ

உளந்தளர் வுற்றனன் நீயும்
ஈங்குவந் திலையேல் என்செய்கேன் இதுதான்

எந்தைநின் திருவருட் கழகோ