3546
அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்

ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள்
நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்

நீலியோ தன்புடை ஆடும்
தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்

தனித்தனி அவர்அவர் எடுத்தே
கத்தவெம் பயமே காட்டினர் நானும்

கலங்கினேன் கலங்கிடல் அழகோ   
3547
வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற

மகள்கையில் கொடுத்தனள் எனைத்தான்
ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ

என்செய்வேன் என்னையே உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித்

தொட்டிலும் ஆட்டிடு கின்றாள்
ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை

ஈன்றவர் அறிவரே எந்தாய்   
3548
வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி

மக்கள்பால் காட்டிவிட் டிருந்தாள்
மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும்

வந்தெனை எடுத்திலார் அவரும்
இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான்

என்செய்வேன் என்னுடை அருமை
நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய்

நீயும்இங் கறிந்திலை யேயோ   
3549
தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே

சோர்ந்தழு திளைத்துமென் குரலும்
கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்

காதுறக் கேட்டிருக் கின்றாள்
செம்மியே மடவார் கொம்மியே பாடிச்

சிரித்திருக் கின்றனர் அந்தோ
இம்மியே எனினும் ஈந்திடார் போல

இருப்பதோ நீயும்எந் தாயே  
3550
துருவிலா வயிரத் தொட்டிலே தங்கத்

தொட்டிலே பலஇருந் திடவும்
திருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி

சிறியனைக் கிடத்தினள் எந்தாய்
பிரிவிலாத் தனிமைத் தலைவநீ பெற்ற

பிள்ளைநான் எனக்கிது பெறுமோ
கருவிலாய் நீஇத் தருணம்வந் திதனைக்

கண்டிடில் சகிக்குமோ நினக்கே