3581
இப்பார் முதல்எண் மூர்த்தமதாய் 

இலங்கும் கருணை எங்கோவே 
தப்பா யினதீர்த் தென்னையும்முன் 

தடுத்தாட் கொண்ட தயாநிதியே 
எப்பா லவரும் புகழ்ந்தேத்தும் 

இறைவா எல்லாம் வல்லோனே 
அப்பா அரசே இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன் கண்டாயே   
3582
புரைசேர் துயரப் புணரிமுற்றும் 

கடத்தி ஞான பூரணமாம் 
கரைசேர்த் தருளி இன்னமுதக் 

கடலைக் குடிப்பித் திடல்வேண்டும் 
உரைசேர் மறையின் முடிவிளங்கும் 

ஒளிமா மணியே உடையானே 
அரைசே அப்பா இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன் கண்டாயே    

3583
கண்ணார் அமுதக் கடலேஎன் 

கண்ணே கண்ணுட் கருமணியே 
தண்ணார் மதியே கதிர்பரப்பித் 

தழைத்த சுடரே தனிக்கனலே 
எண்ணா டரிய பெரியஅண்டம் 

எல்லாம் நிறைந்த அருட்சோதி 
அண்ணா அரசே இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன் கண்டாயே    
3584
பொய்யா தென்றும் எனதுளத்தே 

பொருந்தும் மருந்தே புண்ணியனே 
கையார்ந் திலங்கு மணியேசெங் 

கரும்பே கனியே கடையேற்குச் 
செய்யா உதவி செய்தபெருந் 

தேவே மூவாத் தௌ;ளமுதே 
ஐயா அரசே இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன் கண்டாயே   
3585
இத்தா ரணியில் என்பிழைகள் 

எல்லாம் பொறுத்த என்குருவே 
நித்தா சிற்றம் பலத்தாடும் 

நிருத்தா எல்லாஞ் செயவல்ல 
சித்தா சித்தி புரத்தமர்ந்த 

தேவே சித்த சிகாமணியே 
அத்தா அரசே இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன் கண்டாயே