3601
நயந்த கருணை நடத்தரசே 

ஞான அமுதே நல்லோர்கள் 
வியந்த மணியே மெய்யறிவாம் 

விளக்கே என்னை விதித்தோனே 
கயந்த மனத்தேன் எனினும்மிகக் 

கலங்கி நரகக் கடுங்கடையில் 
பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் 

அழகோ கடைக்கண் பார்த்தருளே   
3602
பார்த்தார் இரங்கச் சிறியேன்நான் 

பாவி மனத்தால் பட்டதுயர் 
தீர்த்தாய் அந்நாள் அதுதொடங்கித் 

தெய்வந் துணைஎன் றிருக்கின்றேன் 
சேர்த்தார் உலகில் இந்நாளில் 

சிறியேன் தனைவெந் துயர்ப்பாவி 
ஈர்த்தால் அதுகண் டிருப்பதுவோ 

கருணைக் கழகிங் கெந்தாயே   
  சேர்த்தாய் - முதற்பதிப்பு, பொ சு, ச மு க, பி இரா  
3603
தாயே எனைத்தான் தந்தவனே 

தலைவா ஞான சபாபதியே 
பேயேன் செய்த பெருங்குற்றம் 

பொறுத்தாட் கொண்ட பெரியோனே 
நீயே இந்நாள் முகமறியார் 

நிலையில் இருந்தால் நீடுலகில் 
நாயே அனையேன் எவர்துணைஎன் 

றெங்கே புகுவேன் நவிலாயே   
3604
ஆயேன் வேதா கமங்களைநன் 

கறியேன் சிறியேன் அவலமிகும் 
பேயேன் எனினும் வலிந்தென்னைப் 

பெற்ற கருணைப் பெருமானே 
நீயே அருள நினைத்தாயேல் 

எல்லா நலமும் நிரம்புவன்நான் 
காயே எனினும் கனிஆகும் 

அன்றே நினது கருணைக்கே    
3605
கருணா நிதியே என்இரண்டு 

கண்ணே கண்ணிற் கலந்தொளிரும் 
தெருணா டொளியே வெளியேமெய்ச் 

சிவமே சித்த சிகாமணியே 
இருணா டுலகில் அறிவின்றி 

இருக்கத் தரியேன் இதுதருணம் 
தருணா அடியேற் கருட்சோதி 

தருவாய் என்முன் வருவாயே