3611
உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய் 

உலவா ஒருபேர் அருளார் அமுதம் 
தருவாய் இதுவே தருணம் தருணம் 

தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ 
வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான் 

மதிசேர் முடிஎம் பதியே அடியேன் 
குருவாய் முனமே மனமே இடமாக் 

குடிகொண் டவனே அபயம் அபயம்    
3612
என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங் 

கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம் 
மன்னே அயனும் திருமா லவனும் 

மதித்தற் கரிய பெரிய பொருளே 
அன்னே அப்பா ஐயா அரசே 

அன்பே அறிவே அமுதே அழியாப் 
பொன்னே மணியே பொருளே அருளே 

பொதுவாழ் புனிதா அபயம் அபயம்    
3613
கருணா நிதியே அபயம் அபயம் 

கனகா கரனே அபயம் அபயம் 
அருணா டகனே அபயம் அபயம் 

அழகா அமலா அபயம் அபயம் 
தருணா தவனே அபயம் அபயம் 

தனிநா யகனே அபயம் அபயம் 
தெருணா டுறுவாய் அபயம் அபயம் 

திருவம் பலவா அபயம் அபயம்    
3614
மருளும் துயரும் தவிரும் படிஎன் 

மனமன் றிடைநீ வருவாய் அபயம் 
இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ் 

சினன்என் றிகழேல் அபயம் அபயம் 
வெருளும் கொடுவெம் புலையும் கொலையும் 

விடுமா றருள்வாய் அபயம் அபயம் 
அருளும் பொருளும் தெருளும் தருவாய் 

அபயம் அபயம் அபயம் அபயம்    
3615
இனிஓர் இறையும் தரியேன் அபயம் 

இதுநின் அருளே அறியும் அபயம் 
கனியேன் எனநீ நினையேல் அபயம் 

கனியே கருணைக் கடலே அபயம் 
தனியேன் துணைவே றறியேன் அபயம் 

தகுமோ தகுமோ தலைவா அபயம் 
துனியே அறவந் தருள்வாய் அபயம் 

சுகநா டகனே அபயம் அபயம்  
  களியே - படிவேறுபாடு ஆ பா