3616
அடியார் இதயாம் புயனே அபயம் 

அரசே அமுதே அபயம் அபயம் 
முடியா தினிநான் தரியேன் அபயம் 

முறையோ முறையோ முதல்வா அபயம் 
கடியேன் அலன்நான் அபயம் அபயம் 

கருணா கரனே அபயம் அபயம் 
தடியேல் அருள்வாய் அபயம் அபயம் 

தருணா தவனே அபயம் அபயம்    
3617
மலவா தனைதீர் கலவா அபயம் 

வலவா திருஅம் பலவா அபயம் 
உலவா நெறிநீ சொலவா அபயம் 

உறைவாய் உயிர்வாய் இறைவா அபயம் 
பலஆ குலம்நான் தரியேன் அபயம் 

பலவா பகவா பனவா அபயம் 
நலவா அடியேன் அலவா அபயம் 

நடநா யகனே அபயம் அபயம்    
3618
கொடியேன் பிழைநீ குறியேல் அபயம் 

கொலைதீர் நெறிஎன் குருவே அபயம் 
முடியேன் பிறவேன் எனநின் அடியே 

முயல்வேன் செயல்வே றறியேன் அபயம் 
படியே அறியும் படியே வருவாய் 

பதியே கதியே பரமே அபயம் 
அடியேன் இனிஓர் இறையும் தரியேன் 

அரசே அருள்வாய் அபயம் அபயம்    
3619
இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம் 

இனிநான் தரியேன் தரியேன் அபயம் 
விடர்போல் எனைநீ நினையேல் அபயம் 

விடுவேன் அலன்நான் அபயம் அபயம் 
உடலோ டுறுமா பொருள்ஆ வியும்இங் 

குனவே எனவே அலவே அபயம் 
சுடர்மா மணியே அபயம் அபயம் 

சுகநா டகனே அபயம் அபயம்    
3620
குற்றம் பலஆ யினும்நீ குறியேல் 

குணமே கொளும்என் குருவே அபயம் 
பற்றம் பலமே அலதோர் நெறியும் 

பதியே அறியேன் அடியேன் அபயம் 
சுற்றம் பலவும் உனவே எனவோ 

துணைவே றிலைநின் துணையே அபயம் 
சிற்றம் பலவா அருள்வாய் இனிநான் 

சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்   

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 பிரிவாற்றாமை 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்