3621
போக மாட்டேன் பிறரிடத்தே பொய்யிற் கிடந்து புலர்ந்துமனம் 
வேக மாட்டேன் பிறிதொன்றும் விரும்ப மாட்டேன் பொய்யுலகன் 
ஆக மாட்டேன் அரசேஎன் அப்பா என்றன் ஐயாநான் 
சாக மாட்டேன் உனைப்பிரிந்தால் தரிக்க மாட்டேன் கண்டாயே    
3622
செல்ல மாட்டேன் பிறரிடத்தே சிறிதுந் தரியேன் தீமொழிகள் 
சொல்ல மாட்டேன் இனிக்கணமுந் துயர மாட்டேன் சோம்பன்மிடி 
புல்ல மாட்டேன் பொய்யொழுக்கம் பொருந்த மாட்டேன் பிறஉயிரைக்
கொல்ல மாட்டேன் உனைஅல்லால் குறிக்க மாட்டேன் கனவிலுமே    
  கண்டாயே - முதற்பதிப்பு, பொ க, சமுக 
3623
வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும் 
பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை 
மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே    
3624
கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும் 
தருணச் சுடரே எனைஈன்ற தாயே என்னைத் தந்தோனே 
வருணப் படிக மணிமலையே மன்றில் நடஞ்செய் வாழ்வேநற் 
பொருண்மெய்ப் பதியே இனித்துயரம் பொறுக்க மாட்டேன் கண்டாயே    
3625
திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித் துலவாச் சுயஞ்சோதி 
வண்ணம் பழுத்த தனிப்பழமே மன்றில் விளங்கு மணிச்சுடரே 
தண்ணம் பழுத்த மதிஅமுதே தருவாய் இதுவே தருணம்என்றன் 
எண்ணம் பழுத்த தினிச்சிறியேன் இறையுந் தரியேன் தரியேனே