3626
நாட்டுக் கிசைந்த மணிமன்றில் ஞான வடிவாய் நடஞ்செயருள் 
ஆட்டுக் கிசைந்த பெருங்கருணை அப்பா என்றன் அரசேஎன் 
பாட்டுக் கிசைந்த பதியேஓர் பரமா னந்தப் பழமேமேல் 
வீட்டுக் கிசைந்த விளக்கேஎன் விவேகம் விளங்க விளக்குகவே  
3627
வேதந் தலைமேற் கொளவிரும்பி வேண்டிப் பரவு நினதுமலர்ப் 
பாதந் தலைமேற் சூட்டிஎனைப் பணிசெய் திடவும் பணித்தனைநான் 
சாதந் தலைமேல் எடுத்தொருவர் தம்பின் செலவும் தரமில்லேன் 
ஏதந் தலைமேற் சுமந்தேனுக் கிச்சீர் கிடைத்த தெவ்வாறே  
 கொடுத்த - முதற்பதிப்பு, பொ சு, பி இரா சமுக 
3628
பொய்விட் டகலாப் புலைக்கொடியேன் பொருட்டா இரவில் போந்தொருநின் 
கைவிட் டகலாப் பெரும்பொருள்என் கையிற் கொடுத்தே களிப்பித்தாய்
மைவிட் டகலா விழிஇன்ப வல்லி மகிழும் மணவாளா 
மெய்விட் டகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய்யருளே  
3629
சாமத் திரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கந் தடுத்துமயல் 
காமக் கடலைக் கடத்திஅருட் கருணை அமுதங் களித்தளித்தாய் 
நாமத் தடிகொண் டடிபெயர்க்கும் நடையார் தமக்கும் கடையானேன் 
ஏமத் தருட்பே றடைந்தேன்நான் என்ன தவஞ்செய் திருந்தேனே  
3630
பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட் 
சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் 
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை 
ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே  

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 இறை பொறுப் பியம்பல் 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்