3631
தேடிய துண்டு நினதுரு வுண்மை 

தெளிந்திடச் சிறிதுநின் னுடனே 
ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே 

உரைத்ததும் உவந்ததும் உண்டோ 
ஆடிய பாதம் அறியநான் அறியேன் 

அம்பலத் தரும்பெருஞ் சோதி 
கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக் 

கூறவுங் கூசும்என் நாவே    
3632
மடம்புரி மனத்தாற் கலங்கிய துண்டு 

வள்ளலே நின்திரு வரவுக் 
கிடம்புரி சிறியேன் கலங்கினேன் எனினும் 

இறையும்வே றெண்ணிய துண்டோ 
நடம்புரி பாதம் அறியநான் அறியேன் 

நான்செயும் வகையினி நன்றே 
திடம்புரிந் தருளிக் காத்திடல் வேண்டும் 

சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே    
3633
நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி 

நின்றதே அன்றிநின் அளவில் 
நோக்கிய நோக்கம் பிறவிட யத்தே 

நோக்கிய திறையும் இங்குண்டோ 
தூக்கிய பாதம் அறியநான் அறியேன் 

துயரினிப் பொறுக்கலேன் சிறிதும் 
தேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத் 

தெளிவித்தல் நின்கடன் சிவனே    
3634
ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும் 

என்னுயிர்க் கின்பமும் பொதுவில் 
ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன் 

அன்றிவே றெண்ணிய துண்டோ 
ஊன்றிய பாதம் அறியநான் அறியேன் 

உறுகணிங் காற்றலேன் சிறிதும் 
தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத் 

துலக்குதல் நின்கடன் துணையே    
3635
மாயையாற் கலங்கி வருந்திய போதும் 

வள்ளல்உன் தன்னையே மதித்துன் 
சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால் 

தலைவவே றெண்ணிய துண்டோ 
தூயபொற் பாதம் அறியநான் அறியேன் 

துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன் 
நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே 

நன்றருள் புரிவதுன் கடனே   
  சாயையாற் 
 தலைவரென் - படிவேறுபாடுகள் ஆ பா