3646
துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த 
பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய் 
அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற 
கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் என்பேன் அந்தோ   
3647
வரைகடந் தடியேன் செய்த வன்பிழை பொறுத்தாட் கொண்டாய் 
திரைகடந் தண்ட பிண்டத் திசைஎலாம் கடந்தே அப்பால் 
கரைகடந் தோங்கும் உன்றன் கருணையங் கடற்சீர் உள்ளம் 
உரைகடந் ததுஎன் றால்யான் உணர்வதென் உரைப்ப தென்னே    
3648
நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ 
கனவினும் பிழையே செய்தேன் கருணைமா நிதியே நீதான் 
நினைவினும் குறியா தாண்டாய் நின்னருட் பெருமை தன்னை 
வினவினும் சொல்வார் காணேன் என்செய்வேன் வினைய னேனே    
3649
வன்செயல் பொறுத்தாட் கொண்ட வள்ளலே அடிய னேன்றன் 
முன்செயல் அவைக ளோடு முடுகுபின் செயல்கள் எல்லாம் 
என்செயல் ஆகக் காணேன் எனைக்கலந் தொன்றாய் நின்றோய் 
நின்செயல் ஆகக் கண்டேன் கண்டபின் நிகழ்த்தல் என்னே   
3650
இருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன் 
பெருமைஎன் என்று நான்தான் பேசுவேன் பேதம் இன்றி 
உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட 
ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே    

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 நடராசபதி மாலை 
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்