3651
அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ சுகாதீத வெளிநடுவிலே 

அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம் அனைத்தும்அவை ஆக்கல்முதலாம் 
பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடுவி ளங்கிஓங்கப் 

புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல் பூரணா காரமாகித் 
தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள் சிறப்பமுதல் அந்தம்இன்றித் 

திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை தெளிந்திட வயங்குசுடரே 
சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ சுந்தரிக் கினியதுணையே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே    
3652
என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்தி லேதயவிலே 

என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே என்இயற் குணம்அதனிலே 
இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என்செவிப் புலன்இசையிலே 

என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே என்அனு பவந்தன்னிலே 
தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே தானே கலந்துமுழுதும் 

தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பிநிறை கின்றஅமுதே 
துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே   
3653
உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம் உள்ளனஎ லாங்கலந்தே 

ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும் உதயாத்த மானம்இன்றி 
இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய் ஏகமாய் ஏகபோக 

இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே இலங்கிநிறை கின்றசுடரே 
கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம் ககன்எலாம் கண்டபரமே 

காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன் கண்காண வந்தபொருளே 
தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த் துணையாய் விளங்கும்அறிவே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே   
3654
மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது மேன்மேற் கலந்துபொங்க 

விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம் விளங்கஅறி வறிவதாகி 
உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந் துவட்டாதுள் ஊறிஊறி 

ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே உள்ளபடி உள்ளஅமுதே 
கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட கண்ணே கலாந்தநடுவே 

கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே கணிப்பருங் கருணைநிறைவே 
துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட் சுகபோக யோகஉருவே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே   
3655
எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலேமேல் 

ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிர டெய்துவடி வந்தன்னிலே 
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மைதனிலே 

கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக் கலந்தோங்கு கின்றபொருளே 
தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச் சேர்ந்தனு பவித்தசுகமே 

சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத் திருமாளி கைத்தீபமே 
துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித் தொளிசெய்ஒளியே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே