3656
அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே அம்மண்ட லந்தன்னிலே 

அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக் கானவடி வாதிதனிலே 
விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட விளக்கும்அவை அவையாகியே 

மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு மெய்ந்நிலையும் ஆனபொருளே 
தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத் தலத்திலுற வைத்தஅரசே 

சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம் தானாய்இ ருந்தபரமே 
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச் சுகமும்ஒன் றானசிவமே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே   
3657
நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற நிலையிலே நுண்மைதனிலே 

நிகழ்விலே நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மைதனிலே 
ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும் ஒண்சுவையி லேதிரையிலே 

உற்றநீர்க் கீழிலே மேலிலே நடுவிலே உற்றியல் உறுத்தும்ஒளியே 
காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக் கருணைமழை பொழிமேகமே 

கனகசபை நடுநின்ற கடவுளே சிற்சபைக் கண்ணோங்கும் ஒருதெய்வமே 
தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற சுகசொருப மானதருவே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே   
3658
ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா ஒளியிலே சுடரிலேமேல் 

ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே உறும்ஆதி அந்தத்திலே 
தௌ;ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம் செயவல்ல செய்கைதனிலே 

சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள் சிறக்கவளர் கின்றஒளியே 
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞானமயமே 

மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன் வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே 
துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச் சுகம்எனக் கீந்ததுணையே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே    
3659
அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின் ஆதிநடு அந்தத்திலே 

ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி ஆடும்அதன் ஆட்டத்திலே 
உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின் உற்றபல பெற்றிதனிலே 

ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட் குபகரித் தருளும்ஒளியே 
குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம் கோடிகிர ணங்கள்வீசிக் 

குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும் குலாவும்ஒரு தண்மதியமே 
துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட சொருபமே துரியபதமே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே   
3660
வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு வத்திலே வான்இயலிலே 

வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே வண்ணத்தி லேகலையிலே 
மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே 

வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை வைத்தஅருள் உற்றஒளியே 
தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித் திரளிலே தித்திக்கும்ஓர் 

தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச் செப்பிடாத் தௌ;ளமுதமே 
தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த சொருபமே சொருபசுகமே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே