3666
எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாஞ்செய் வல்லதாகி 

இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பமாகி 
அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த அருளாகி அருள்வெளியிலே 

அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள் அருட்பெருஞ் சோதியாகிக் 
கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க் காட்சியே கருணைநிறைவே 

கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற கதியே கனிந்தகனியே 
வௌ;வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னு வீற்றிருந் தருளும்அரசே 

மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராசபதியே    
3667
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம்உடனே 

நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின் ஞானமெய்க் கொடிநாட்டியே 
மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம் முன்னிப் படைத்தல்முதலாம் 

முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம் மூர்த்திகளும் ஏவல்கேட்ப 
வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர் வாய்ந்துபணி செய்யஇன்ப 

மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல் வளத்தொடு செலுத்துமரசே 
சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரியநடு நின்றசிவமே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே   
3668
ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே உன்னமுடி யாஅவற்றின் 

ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம் உற்றகோ டாகோடியே 
திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா சிவஅண்டம் எண்ணிறந்த 

திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம் சீரண்டம் என்புகலுவேன் 
உறுவுறும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில் உறுசிறு அணுக்களாக 

ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும் ஒருபெருங் கருணைஅரசே 
மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா வரந்தந்த மெய்த்தந்தையே 

மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே   
3669
வரவுசெல வற்றபரி பூரணா காரசுக வாழ்க்கைமுத லாஎனக்கு 

வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே வயங்கிஒளிர் கின்றஒளியே 
இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபேர் இன்பமே அன்பின்விளைவே 

என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே என்னாசை யேஎன் அறிவே 
கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற கருணைஅமு தேகரும்பே 

கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல கடவுளே கலைகள்எல்லாம் 
விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான மெய்ம்மையே சன்மார்க்கமா 

மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராசபதியே   
3670
பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும் பகுதியும் காலம்முதலாப் 

பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த பரமாதி நாதம்வரையும் 
சீராய பரவிந்து பரநாத முந்தனது திகழங்கம் என்றுரைப்பத் 

திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு தெய்வமே என்றும்அழியா 
ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே உயர்தந்தை யேஎன்உள்ளே 

உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே உவப்பேஎன் னுடையஉயிரே 
ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த அரசே அருட்சோதியே 

அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை அமுதநட ராசபதியே