3671
உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை உறுமவுன வெளிவெளியின்மேல் 

ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம் ஒருங்கநிறை உண்மைவெளியே 
திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய் சித்தே எனக்குவாய்த்த 

செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை தெரித்தெனை வளர்த்தசிவமே 
பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்றெனக்கே 

பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப் பரமமே பரமஞான 
வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த வண்ணநடம் இடுவள்ளலே 

மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம் வல்லநட ராசபதியே    
3672
ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத் துயிர்க்கெலாம் தரினும்அந்தோ 

ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற் குவப்பொடு கிடைத்தநிதியே 
வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா வரந்தந்த வள்ளலேஎன் 

மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே மதிஅமுதின் உற்றசுகமே 
ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ தென்னைஎன் றதிசயிப்ப 

இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை இன்புறச் செய்தகுருவே 
ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை யாடென் றுரைத்தஅரசே 

அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிஒளிர் அபயநட ராசபதியே    
3673
பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என் புகல்வழிப் பணிகள்கேட்பப் 

பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப் பொருள்கண்ட சத்தர்பலரும் 
ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங் கிசைந்தெடுத் துதவஎன்றும் 

இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற் றிருக்கஎனை வைத்தகுருவே 
நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும் நலம்பெறச் சன்மார்க்கமாம் 

ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல் நடத்திவரு நல்லஅரசே 
வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய மாமதியின் அமுதநிறைவே 

மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே    
3674
வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது மனமிக மயங்கிஒருநாள் 

மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை மறந்துதுயில் கின்றபோது 
நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை நன்றுற எழுப்பிமகனே 

நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ நலிதல்அழ கோஎழுந்தே 
ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண் டின்புறுக என்றகுருவே 

என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே ரின்பமே என்செல்வமே 
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்தசுகமே 

மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராசபதியே    
3675
என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம் ஏதாக முடியுமோஎன் 

றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின் றேங்கிய இராவில்ஒருநாள் 
மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே வெளிநின் றணைத்தென்உள்ளே 

மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே வீற்றிருக் கின்றகுருவே 
நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட நல்குரவி னோன்அடைந்த 

நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே நான்கண்டு கொண்டமகிழ்வே 
வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை வலியவந் தாண்டபரமே 

மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே