3676
துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச் சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே 

சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே சுதந்தரம தானதுலகில் 
வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய் வாழ்வெலாம் பெற்றுமிகவும் 

மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன் மனநினைப் பின்படிக்கே 
அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை யாடுக அருட்சோதியாம் 

ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோ ம் கைவிடோ ம் ஆணைநம் ஆணைஎன்றே 
இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந் திசைவுடன் இருந்தகுருவே 

எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில் இலங்குநட ராசபதியே   
3677
பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம் பேய்ப்பிடிப் புற்றபிச்சுப் 

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல பேதமுற் றங்கும்இங்கும் 
போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண் போகாத படிவிரைந்தே 

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப் பொருளினை உணர்த்திஎல்லாம் 
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ என்பிள்ளை ஆதலாலே 

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே றெண்ணற்க என்றகுருவே 
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்திருள் அகற்றும்ஒளியே 

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு நீதிநட ராசபதியே   
3678
சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம் தான்என அறிந்தஅறிவே 

தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே தனித்தபூ ரணவல்லபம் 
வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும் விளையவிளை வித்ததொழிலே 

மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே வியந்தடைந் துலகம்எல்லாம் 
மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை வானவர மேஇன்பமாம் 

மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின் மரபென் றுரைத்தகுருவே 
தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத் தேற்றிஅருள் செய்தசிவமே 

சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே தெய்வநட ராசபதியே   
3679
நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின்வார்த்தை யாவும்நமது 

நீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும் நெஞ்சம்அஞ் சேல் உனக்கே 
ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும் அழியாத நிலையின்நின்றே 

அன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ ஆடிவாழ் கென்றகுருவே 
நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம் நான்இளங் காலைஅடைய 

நல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனேஎன் 
ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனேஉள் 

ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே ஓங்குநட ராசபதியே   
3680
அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக் கன்புடன் உரைத்தபடியே 

அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே 
இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே இயற்றிவிளை யாடிமகிழ்க 

என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி இயல்சுத்தம் ஆதிமூன்றும் 
எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம் எய்திநின் னுட்கலந்தேம் 

இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ தெம்மாணை என்றகுருவே 
மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத வரமாகி நின்றசிவமே 

மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே