3681
காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங் கருணைஅமு தேஎனக்குக் 

கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக் காட்சியே கனகமலையே 
தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித் தலைவனே நின்பெருமையைச் 

சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச் சார்கின்ற தோறும்அந்தோ 
வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும் மதிஎலாந் தித்திக்கும்என் 

மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில் வரும்இன்பம் என்புகலுவேன் 
தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம் தோன்றிட விளங்குசுடரே 

துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே    
3682
எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே எல்லாஞ்செய் வல்லசித்தாய் 

என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை எழுமையும் விடாதநட்பே 
கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக் கட்டியே கருணைஅமுதே 

கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது கண்காண வந்தகதியே 
மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன் வினைஎலாந் தீர்த்தபதியே 

மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக விளைவேஎன் மெய்ம்மைஉறவே 
துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே சுத்தசன் மார்க்கநிலையே 

துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே   
3683
துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான் சோர்ந்தொரு புறம்படுத்துத் 

தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால் தூயதிரு வாய்மலர்ந்தே 
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இருகைமலர் கொண்டுதூக்கி 

என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத் தியலுற இருத்திமகிழ்வாய் 
வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி வைத்தநின் தயவைஅந்தோ 

வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப வாரிஅமு தூறிஊறித் 
துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச் சுகவண்ணம் என்புகலுவேன் 

துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே    
3684
ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே ஒருமைநிலை உறுஞானமே 

உபயபத சததளமும் எனதிதய சததளத் தோங்கநடு வோங்குசிவமே 
பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய பருவத்தில் ஆண்டபதியே 

பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம் படிவைக்க வல்லபரமே 
ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வாய் ஆடுவோர்க் கரியசுகமே 

ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி ஆகிநிறை கின்றநிறைவே 
தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது தூக்கந் தொலைத்ததுணையே 

துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே   

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 சற்குருமணி மாலை 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3685
மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே 

மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே 
கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக் 

கோயில் இருந்த குணப்பெருங் குன்றே 
வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே 

விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே 
சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய் 

தனிநட ராசஎன் சற்குரு மணியே