3686
கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே 

கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே 
சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே 

துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே 
சிற்கரை திரையறு திருவருட் கடலே 

தௌ;ளமு தேகனி யேசெழும் பாகே 
சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே  
3687
என்னுயி ரேஎன தின்னுயிர்க் குயிரே 

என்அறி வேஎன தறிவினுக் கறிவே 
அன்னையில் இனியஎன் அம்பலத் தமுதே 

அற்புத மேபத மேஎன தன்பே 
பொன்னிணை அடிமலர் முடிமிசை பொருந்தப் 

பொருத்திய தயவுடைப் புண்ணியப் பொருளே 
தன்னியல் அறிவருஞ் சத்திய நிலையே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே    
3688
காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே 

கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே 
தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே 

சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே 
ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே 

அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே 
தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே   
3689
உருவமும் அருவமும் உபயமும் உளதாய் 

உளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே 
கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே 

கண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே 
திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே 

சிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே 
தருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே    
3690
ஆறந்த நிலைகளின் அனுபவ நிறைவே 

அதுஅது வாய்ஒளிர் பொதுவுறு நிதியே 
கூறெந்த நிலைகளும் ஒருநிலை எனவே 

கூறிஎன் உள்ளத்தில் குலவிய களிப்பே 
பேறிந்த நெறிஎனக் காட்டிஎன் தனையே 

பெருநெறிக் கேற்றிய ஒருபெரும் பொருளே 
சாறெந்த நாள்களும் விளங்கும்ஓர் வடல்வாய்த் 

தனிநட ராசஎன் சற்குரு மணியே