3691
சாகாத தலைஇது வேகாத காலாம் 

தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே 
போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே 

பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே 
ஆகாத பேர்களுக் காகாத நினைவே 

ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே 
தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே    
3692
தத்துவ மசிநிலை இதுஇது தானே 

சத்தியம் காண்எனத் தனித்துரைத் தெனக்கே 
எத்துவந் தனைகளும் நீக்கிமெய்ந் நிலைக்கே 

ஏற்றிநான் இறவாத இயல்அளித் தருளால் 
சித்துவந் துலகங்கள் எவற்றினும் ஆடச் 

செய்வித்த பேரருட் சிவபரஞ் சுடரே 
சத்துவ நெறிதரு வடல்அருட் கடலே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே    
3693
இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய் 

இதுவழி எனஎனக் கியல்புற உரைத்தே 
விதுஅமு தொடுசிவ அமுதமும் அளித்தே 

மேனிலைக் கேற்றிய மெய்நிலைச் சுடரே 
பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே 

புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே 
சதுமறை முடிகளின் முடியுறு சிவமே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே    
3694
என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம் 

இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய் 
முன்னிலை சிறிதுறல் இதுமயல் உறலாம் 

முன்னிலை பின்னிலை முழுநிலை உளவாம் 
இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே 

இயனிலை அடைகஎன் றியம்பிய பரமே 
தன்னிலை ஆகிய நன்னிலை அரசே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே  
 சிறிதுற - பி இராபதிப்பு சிறிதுறில் - படிவேறுபாடு ஆ பா  
3695
காரணம் இதுபுரி காரியம் இதுமேல் 

காரண காரியக் கருவிது பலவாய் 
ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே 

அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே 
பூரண நிலைஅனு பவமுறில் கணமாம் 

பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே 
தாரணி தனில்என்ற தயவுடை அரசே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே