3701
சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும் 

தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே 
வந்திர விடைஎனக் கருளமு தளித்தே 

வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே 
மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே 

மாநிலத் திடைஎனை வருவித்த பதியே 
தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே   
3702
அமரரும் முனிவரும் அதிசயித் திடவே 

அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே 
கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே 

காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே 
எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே 

எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே 
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே   
3703
நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே 

நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே 
துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே 

சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே 
என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி 

இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே 
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே    
3704
ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி 

அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே 
ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே 

உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே 
சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச் 

சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே 
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே    
3705
கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே 

கலந்துகொண் டினிக்கின்ற கற்பகக் கனியே 
அற்பனை யாண்டுகொண் டறிவளித் தழியா 

அருள்நிலை தனில்உற அருளிய அமுதே 
பற்பல உலகமும் வியப்பஎன் தனக்கே 

பதமலர் முடிமிசைப் பதித்தமெய்ப் பதியே 
தற்பர பரம்பர சிதம்பர நிதியே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே