3706
பவநெறி செலுமவர் கனவினும் அறியாப் 

பரம்பொரு ளாகிஎன் உளம்பெறும் ஒளியே 
நவநெறி கடந்ததோர் ஞானமெய்ச் சுகமே 

நான்அருள் நிலைபெற நல்கிய நலமே 
சிவநெறி யேசிவ நெறிதரு நிலையே 

சிவநிலை தனில்உறும் அனுபவ நிறைவே 
தவநெறி செலும்அவர்க் கினியநல் துணையே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே    
3707
அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே 

அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே 
செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே 

திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே 
பிரியாமல் என்னுளம் கலந்தமெய்க் கலப்பே 

பிறவாமல் இறவாமல் எனைவைத்த பெருக்கே 
தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே    
3708
கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே 

காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே 
எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே 

இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே 
வருதாகந் தவிர்த்திட வந்ததௌ; அமுதே 

மாணிக்க மலைநடு மருவிய பரமே 
தருதான முணவெனச் சாற்றிய பதியே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே   
3709
ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே 

எட்டாத நிலையேநான் எட்டிய மலையே 
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி 

ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே 
ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே 

இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே 
சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே    

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 தற்போத இழப்பு 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3710
அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும் 

அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச் 
செவ்வண்ணம் பழுத்ததனித் திருவுருக்கண் டெவர்க்கும் 

தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன் 
இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில் 

இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ 
மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன் 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே