3716
மஞ்சனைய குழலம்மை எங்கள்சிவ காம 

வல்லிமகிழ் திருமேனி வண்ணமது சிறிதே 
நஞ்சனைய கொடியேன்கண் டிடப்புரிந்த அருளை 

நாடறியா வகைஇன்னும் நீடநினைத் திருந்தேன் 
அஞ்சனைய பிறர்எல்லாம் அறிந்துபல பேசி 

அலர்தூற்ற அளியஎனை வெளியில்இழுத் திட்டு 
வஞ்சனைசெய் திடவந்த விதியைநினைந் தையோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே    
3717
அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா 

தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில் 
புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம் 

பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா 
துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை 

உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால் 
வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே   
3718
விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த 

வினைக்கொடியேம் பொருட்டாக விரும்பிஎழுந் தருளிக் 
கழற்கிசைந்த பொன்அடிநம் தலைமேலே அமைத்துக் 

கருணைசெயப் பெற்றனம்இக் கருணைநம்மை இன்னும் 
நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து 

நின்றஎன்னை வெளியில்இழுத் துலகவியா பார 
வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே   
3719
அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா 

அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக் 
கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர் 

குறிப்பின்றி இருப்பம்எனக் கொண்டகத்தே இருந்தேன் 
படிபிடித்த பலர்பலவும் பகர்ந்திடஇங் கெனைத்தான் 

படுவழக்கிட் டுலகியலாம் வெளியில்இழுத் தலைத்தே 
மடிபிடித்துப் பறிக்கவந்த விதியைநினைந் தையோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே    

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 திருமுன் விண்ணப்பம் 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3720
மாழை மாமணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற 
வாழை வான்பழச் சுவைஎனப் பத்தர்தம் மனத்துளே தித்திப்போய் 
ஏழை நாயினேன் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் செயல்வேண்டும் 
கோழை மானிடப் பிறப்பிதில் உன்னருட் குருஉருக் கொளும்ஆறே