3721
பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா கனிந்தோங்கி 
மன்னு வாழையின் பழச்சுவை எனப்பத்தர் மனத்துளே தித்திப்போய் 
சின்ன நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும் 
இன்ன என்னுடைத் தேகம்நல் ஒளிபெறும் இயல்உருக் கொளும்ஆறே    
3722
விஞ்சு பொன்னணி அம்பலத் தருள்நடம் விளைத்துயிர்க் குயிராகி 
எஞ்சு றாதபேர் இன்பருள் கின்றஎன் இறைவநின் அருள்இன்றி 
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி அமைத்தருள் செயல்வேண்டும் 
துஞ்சும் இவ்வுடல் இம்மையே துஞ்சிடாச் சுகஉடல் கொளும்ஆறே   
3723
ஓங்கு பொன்அணி அம்பலத் தருள்நடம் உயிர்க்கெலாம் ஒளிவண்ணப் 
பாங்கு மேவநின் றாடல்செய் இறைவநின் பதமலர் பணிந்தேத்தாத் 
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும் 
ஈங்கு வீழுடல் இம்மையே வீழ்ந்திடா இயலுடல் உறும்ஆறே    
3724
இலங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற இறைவஇவ் வுலகெல்லாம் 
துலங்கும் வண்ணநின் றருளுநின் திருவடித் துணைதுணை என்னாமல் 
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும் 
அலங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறா அருள்உடல் உறும்ஆறே   
3725
சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற 
அறந்த வாதசே வடிமலர் முடிமிசை அணிந்தக மகிழ்ந்தேத்த 
மறந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும்
பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறும்ஆறே