3726
விளங்கு பொன்அணிப் பொதுநடம் புரிகின்ற விரைமலர்த் திருத்தாளை 
உளங்கொள் அன்பர்தம் உளங்கொளும் இறைவநின் ஒப்பிலாப் பெருந்தன்மை 
களங்கொள் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும் 
துளங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறாத் தொல்லுடல் உறும்ஆறே   
 விளங்கு பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே விரைமலர்த் திருத்தாளை - முதற் பதிப்பு  
3727
வாய்ந்த பொன்அணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே மறைஎல்லாம் 
ஆய்ந்தும் இன்னஎன் றறிந்திலா நின்திரு அடிமலர் பணியாமல் 
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும் 
ஏய்ந்த இவ்வுடல் இம்மையே திருவருள் இயல்உடல் உறும்ஆறே    
3728
மாற்றி லாதபொன் அம்பலத் தருள்நடம் வயங்கநின் றொளிர்கின்ற 
பேற்றில் ஆருயிர்க் கின்பருள் இறைவநின் பெயற்கழல் கணிமாலை 
சாற்றி டாதஎன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும் 
காற்றில் ஆகிய இவ்வுடல் இம்மையே கதியுடல் உறும்ஆறே   
3729
தீட்டு பொன்அணி அம்பலத் தருள்நடம் செய்துயிர்த் திரட்கின்பம் 
காட்டு கின்றதோர் கருணையங் கடவுள்நின் கழலிணை கருதாதே 
நீட்டு கின்றஎன் விண்ணப்பம் திருச்செவி நேர்ந்தருள் செயல்வேண்டும் 
வாட்டும்இவ்வுடல் இம்மையே அழிவுறா வளமடைந் திடும்ஆறே   
  ஆட்டும் - படிவேறுபாடு ஆ பா  
 

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 இனித்த வாழ்வருள் எனல் 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3730
உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி 
புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம் பொறுத்தடி யேன்தனக் களித்த 
வரத்தவா உண்மை வரத்தவா ஆக மங்களும் மறைகளும் காணாத் 
தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில் தனித்தவா இனித்தவாழ் வருளே