3731
முன்னவா திபர்க்கு முன்னவா வேத முடிமுடி மொழிகின்ற முதல்வா 
பின்னவா திபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும்
சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும் 
மன்னவா அமுதம் அன்னவா எல்லாம் வல்லவா நல்லவாழ் வருளே    
3732
விடையவா தனைதீர் விடையவா சுத்த வித்தைமுன் சிவவரை கடந்த 
நடையவா ஞான நடையவா இன்ப நடம்புரிந் துயிர்க்கெலாம் உதவும் 
கொடையவா ஓவாக் கொடையவா எனையாட் கொண்டெனுள் அமர்ந்தரு ளியஎன் 
உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க் குரியவா பெரியவாழ் வருளே   
3733
வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனமுதல் கடந்த 
புலத்தவா எனது புலத்தவா தவிர்த்துப் பூரண ஞானநோக் களித்த 
நலத்தவா வரையா நலத்தவா மறைகள் நாடியும் காண்பதற் கரிதாம் 
பலத்தவா திருஅம் பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்தவாழ் வருளே   
3734
உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம் 
புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண் 
குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும் 
தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே   
3735
தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச் 
சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா 
சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே 
ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ் வருளே