3736
மதம்புகல் முடிபு கடந்தமெய்ஞ் ஞான மன்றிலே வயங்கொள்நா டகஞ்செய் 
பதம்புகல் அடியேற் கருட்பெருஞ் சோதிப் பரிசுதந் திடுதும்என் றுளத்தே 
நிதம்புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்தநிற் குணமாம் 
சிதம்புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞானவாழ் வருளே    
3737
மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும் 
ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா 
ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும் 
மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே   
3738
பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே 
தங்கும்ஓர் சோதித் தனிப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா 
துங்கம்உற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச் 
சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே   
3739
இனித்தசெங் கரும்பில் எடுத்ததீஞ் சாற்றின் இளம்பதப் பாகொடு தேனும் 
கனித்ததீங் கனியின் இரதமும் கலந்து கருத்தெலாம் களித்திட உண்ட 
மனித்தரும் அமுத உணவுகொண் டருந்தும் வானநாட் டவர்களும் வியக்கத் 
தனித்தமெய்ஞ் ஞானஅமுதெனக் களித்த தனியவா இனியவாழ் வருளே   

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 திருவருள் விழைதல் 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3740
செய்வகை அறியேன் மன்றுள்மா மணிநின் 

திருவுளக் குறிப்பையும் தெரியேன் 
உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ 

உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன் 
மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன் 

வினையனேன் என்செய விரைகேன் 
பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன் 

புலையனேன் புகல்அறி யேனே