3741
அறிவிலேன் அறிந்தார்க் கடிப்பணி புரியேன் 

அச்சமும் அவலமும் உடையேன் 
செறிவிலேன் பொதுவாம் தெய்வம்நீ நினது 

திருவுளத் தெனைநினை யாயேல் 
எறிவிலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் 

என்செய்வேன் யார்துணை என்பேன் 
பிறிவிலேன் பிரிந்தால் உயிர்தரிக் கலன்என் 

பிழைபொறுத் தருள்வதுன் கடனே    
3742
உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன் 

உடல்பொருள் ஆவியும் உனக்கே 
பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த 

பின்னும்நான் தளருதல் அழகோ 
என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன் 

என்செய்வேன் யார்துணை என்பேன் 
முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி 

முறிதல்ஓர் கணம்தரி யேனே    
3743
தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது 

தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே 
தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் 

தெரித்திடாய் எனில்இடர் எனைத்தான் 
எரித்திடும் அந்தோ என்செய்வேன் எங்கே 

எய்துகேன் யார்துணை என்பேன் 
திரித்தநெஞ் சகத்தேன் சரித்திரம் அனைத்தும் 

திருவுளம் தெரிந்தது தானே    
3744
தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே 

சத்தியம் உணர்ந்தனன் தனித்தே 
தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின் 

திருவுளம் தெரிந்ததெந் தாயே 
ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும் 

அரைக்கணம் ஆயினும் தாழ்க்கில் 
நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே 

நடம்புரி ஞானநா டகனே    
3745
ஞானமும் அதனால் அடைஅனு பவமும் 

நாயினேன் உணர்ந்திட உணர்த்தி 
ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள் 

இந்தநாள் அடியனேன் இங்கே 
ஊனம்ஒன் றில்லோய் நின்றனைக் கூவி 

உழைக்கின்றேன் ஒருசிறி தெனினும் 
ஏனென வினவா திருத்தலும் அழகோ 

இறையும்நான் தரிக்கலன் இனியே