3746
இனியநற் றாயின் இனியஎன் அரசே 

என்னிரு கண்ணினுண் மணியே 
கனிஎன இனிக்கும் கருணைஆர் அமுதே 

கனகஅம் பலத்துறும் களிப்பே 
துனிஉறு மனமும் சோம்புறும் உணர்வும் 

சோர்வுறு முகமும்கொண் டடியேன் 
தனிஉளங் கலங்கல் அழகதோ எனைத்தான் 

தந்தநற் றந்தைநீ அலையோ    
3747
தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும் 

சாமியும் பூமியும் பொருளும் 
சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும் 

சுற்றமும் முற்றும்நீ என்றே 
சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின் 

திருவுளம் தெரிந்ததே எந்தாய் 
நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல் 

நீதியோ நின்அருட் கழகோ    
3748
அழகனே ஞான அமுதனே என்றன் 

அப்பனே அம்பலத் தரசே 
குழகனே இன்பக் கொடிஉளம் களிக்கும் 

கொழுநனே சுத்தசன் மார்க்கக் 
கழகநேர் நின்ற கருணைமா நிதியே 

கடவுளே கடவுளே எனநான் 
பழகநேர்ந் திட்டேன் இன்னும்இவ் வுலகில் 

பழங்கணால் அழுங்குதல் அழகோ   
3749
பழம்பிழி மதுரப் பாட்டல எனினும் 

பத்தரும் பித்தரும் பிதற்றும் 
கிழம்பெரும் பாட்டும் கேட்பதுன் உள்ளக் 

கிளர்ச்சிஎன் றறிந்தநாள் முதலாய் 
வழங்குநின் புகழே பாடுறு கின்றேன் 

மற்றொரு பற்றும்இங் கறியேன் 
சழங்குடை உலகில் தளருதல் அழகோ 

தந்தையுந் தாயும்நீ அலையோ    
3750
தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான 

சபையிலே தனிநடம் புரியும் 
தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன் 

தூக்கமும் சோம்பலும் துயரும் 
மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும் 

வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ 
நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன் 

நல்அருட் சோதிதந் தருளே