3751
சோதியேல் எனைநீ சோதனை தொடங்கில் 

சூழ்உயிர் விடத்தொடங் குவன்நான் 
நீதியே நிறைநின் திருவருள் அறிய 

நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே 
ஓதியே உணர்தற் கரும்பெரும் பொருளே 

உயிர்க்குயிர் ஆகிய ஒளியே 
ஆதியே நடுவே அந்தமே ஆதி 

நடுஅந்தம் இல்லதோர் அறிவே    
3752
இல்லைஉண் டெணும்இவ் விருமையும் கடந்தோர் 

இயற்கையின் நிறைந்தபே ரின்பே 
அல்லைஉண் டெழுந்த தனிப்பெருஞ் சுடரே 

அம்பலத் தாடல்செய் அமுதே 
வல்லைஇன் றடியேன் துயர்எலாம் தவிர்த்து 

வழங்குக நின்அருள் வழங்கல் 
நல்லைஇன் றலது நாளைஎன் றிடிலோ 

நான்உயிர் தரிக்கலன் அரசே    
3753
அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின் 

அருளர செனஅறிந் தனன்பின் 
உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை 

உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய் 
வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி 

வழிகின்ற தென்வசங் கடந்தே 
இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை 

ஈந்தருள் இற்றைஇப் போதே    
3754
போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த 

புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும் 
சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும் 

தூயர்கள் மனம்அது துளங்கித் 
தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ 

தனிஅருட் சோதியால் அந்த 
வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம் 

வழங்குவித் தருளுக விரைந்தே   
3755
விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும் 

விளம்பும்இத் தருணம்என் உளந்தான் 
கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக் 

கரைஎலாம் கடந்தது கண்டாய் 
வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம் 

வல்லவா அம்பல வாணா 
திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித் 

திகழ்வித்த சித்தனே சிவனே