3756
சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும் 

தெய்வம்ஒன் றேஎனும் திறமும் 
நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும் 

நன்மையும் நரைதிரை முதலாம் 
துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச் 

சுகவடி வம்பெறும் பேறும் 
தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ 

தந்தருள் தருணம்ஈ தெனக்கே    
3757
தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத் 

தனிநெறி உலகெலாம் தழைப்பக் 
கருணையும் சிவமே பொருள்எனக் கருதும் 

கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப் 
பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப் 

புண்ணியம் பொற்புற வயங்க 
அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே 

அருட்பெருஞ் சோதிஎன் அரசே    
3758
என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற் 

றிருள்இர வொழிந்தது முழுதும் 
மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன் 

மங்கல முழங்குகின் றனசீர்ப் 
பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப் 

பூவையர் புணர்ந்திடப் போந்தார் 
சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி 

துலங்கவந் தருளுக விரைந்தே    
3759
வந்தருள் புரிக விரைந்திது தருணம் 

மாமணி மன்றிலே ஞான 
சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும் 

சுத்தசன் மார்க்கசற் குருவே 
தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல 

தனிஅருட் சோதியை எனது 
சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே 

செய்வித் தருள்கசெய் வகையே    

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 திருக்கதவந் திறத்தல் 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3760
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே 

திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ 
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும் 

ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ 
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே 

கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ 
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே 

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே