3771
எஞ்சல் இன்றிய துயரினால் இடரால் 

இடுக்குண் டையநின் இன்னருள் விரும்பி 
வஞ்ச நெஞ்சினேன் வந்துநிற் கின்றேன் 

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் 
அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும் 

அப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும் 
தஞ்சம் என்றவர்க் கருள்வடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே   
3772
சூழ்வி லாதுழல் மனத்தினால் சுழலும் 

துட்ட னேன்அருட் சுகப்பெரும் பதிநின் 
வாழ்வு வேண்டினேன் வந்துநிற் கின்றேன் 

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் 
ஊழ்வி டாமையில் அரைக்கணம் எனினும் 

உன்னை விட்டயல் ஒன்றும்உற் றறியேன் 
தாழ்வி லாதசீர் தருவடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே    
3773
ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால் 

அலைதந் தையவோ அயர்ந்துளம் மயர்ந்து 
வாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன் 

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் 
நாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன் 

நாயி னேன்பிழை பொறுத்திது தருணம் 
தாட்ட லந்தரு வாய்வடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே   
  நயந்திது - படிவேறுபாடு ஆ பா  
3774
கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால் 

காடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ 
வருண நின்புடை வந்துநிற் கின்றேன் 

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் 
அருணன் என்றெனை அகற்றிடு வாயேல் 

ஐய வோதுணை அறிந்திலன் இதுவே 
தருணம் எற்கருள் வாய்வடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிபெரும் பதியே   
3775
கரண வாதனை யால்மிக மயங்கிக் 

கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன் 
மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன் 

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் 
இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர் 

இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய 
சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே