3786
எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே 

எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே 
இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ் 

வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும் 
மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம் 

வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில் 
விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும் 

வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ    
3787
கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும் 

கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா 
ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே 

அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே 
தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே 

சந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின் 
நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது 

நனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே   
3788
அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே 

அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான் 
கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற தரசே 

கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம் 
பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில் 

புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ 
இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின் 

றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே   
  கலக்குகின்ற - ச மு க பதிப்பு 
 மிசையின் - ச மு க பதிப்பு  
3789
இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம் 

இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான் 
மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி 

வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய் 
குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது 

குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை 
பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் 

புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே    

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 உண்மை கூறல் 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3790
தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன் 

தந்தைய ரேபெருந் தயவுடை யவரே 
பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம் 

பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே 
இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா 

இறையவ ரேஉமை இங்குகண் டல்லால் 
அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே