3791
பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன் 

பேசல்நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன் 
உறுவதுநும் அருள்அன்றிப் பிரிதொன்றும் உவவேன் 

உன்னல்உம் திறன்அன்றிப் பிரிதொன்றும் உன்னேன் 
மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர் 

வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால் 
அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே    
3792
கரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும் 

காட்டிஎன் உள்ளம் கலந்தினிக் கின்றீர் 
விரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன் 

மேல்விளை வறிகிலன் விச்சைஒன் றில்லேன் 
துரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர் 

தூயநும் பேரருட் சோதிகண் டல்லால் 
அரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே    
3793
தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன் 

தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே 
தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும் 

தூயநும் திருவருள் நேயம்விட் டறியேன் 
விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை 

வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர் 
அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே   
3794
காசையும் பணத்தையும் கன்னியர் தமையும் 

காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர் 
நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால் 

நேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ 
ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர் 

இறையவ ரேஉமை இன்றுகண் டல்லால் 
ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே    
3795
என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம் 

ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர் 
இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர் 

என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே 
வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர் 

வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால் 
அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே