3796
திருந்தும்என் உள்ளத் திருக்கோயில் ஞான 

சித்தி புரம்எனச் சத்தியம் கண்டேன் 
இருந்தருள் கின்றநீர் என்னிரு கண்கள் 

இன்புற அன்றுவந் தெழில்உருக் காட்டி 
வருந்தலை என்றெனைத் தேற்றிய வாறே 

வள்ளலே இன்றுநும் வரவுகண் டல்லால் 
அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே    
3797
கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர் 

கருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர் 
உரைக்கண வாத உயர்வுடை யீர்என் 

உரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர் 
வரைக்கண எண்குண மாநிதி ஆனீர் 

வாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால் 
அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே   
3798
மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே 

மாலையும் காலையும் மத்தியா னத்தும் 
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற் 

காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து 
எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர் 

இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால் 
அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே    
3799
கறுத்துரைக் கின்றவர் களித்துரைக் கின்ற 

காலைஈ தென்றே கருத்துள் அறிந்தேன் 
நிறுத்துரைக் கின்றபல் நேர்மைகள் இன்றி 

நீடொளிப் பொற்பொது நாடகம் புரிவீர் 
செறுத்துரைக் கின்றவர் தேர்வதற் கரியீர் 

சிற்சபை யீர்எனைச் சேர்ந்திடல் வேண்டும் 
அறுத்துரைக் கின்றேன்நான் பொறுத்திட மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே   

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 பிரியேன் என்றல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3800
அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன் 

அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே 
இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி 

எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ 
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின் 

தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும் 
துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே 

சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே