3801
ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா 

அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன் 
கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும் 

குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன் 
ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான் 

உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன் 
மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது 

மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே    
3802
படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே 

பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென் 
உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன் 

உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய் 
வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள் 

மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே 
நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான 

நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே    
3803
வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட 

மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த 
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ 

இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ 
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு 

மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ 
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன் 

கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே    
3804
செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள் 

திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே 
பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே 

பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன் 
எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே 

எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன் 
ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன் 

அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே    
3805
முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு 

முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன் 
இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே 

எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ 
அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே 

ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய் 
என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே 

என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே