3806
உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால் 

உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ 
என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான் 

என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய் 
அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும் 

அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே 
இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல் 

இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே   
3807
நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது 

நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும் 
வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை 

மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய 
ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன் 

உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன் 
பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே 

பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே    
3808
தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே 

சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த 
உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள் 

ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ 
கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது 

கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான் 
வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி 

விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே   
3809
பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான் 

பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே 
துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை 

துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த 
அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன் 

அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே 
உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய் 

உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே   
3810
கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே 

கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே 
சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த் 

தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள் 
தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து 

தானாகி நானாடத் தருணம்இது தானே 
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய் 

குருவேஎன் குற்றமெலாம் குணமாக்கொண் டவனே    

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 சிவ தரிசனம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்