3811
திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம் 

செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே 
உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே 

உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே 
அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய் 

அப்பாலும் ஆய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே 
மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா 

வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே    
3812
சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே 

தூயவனே நேயவனே சோதிஉரு வவனே 
நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே 

நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும் 
அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை 

ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம் 
வல்லவனே சிவகாம வல்லிமண வாளா 

மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே    
3813
துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே 

சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே 
பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே 

பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன் 
கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன் 

கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ 
அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே 

அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே    
3814
மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே 

மலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே 
இறப்பறியாத் திருநெறியில் என்னைவளர்த் தருளும் 

என்னுடைய நற்றாயே எந்தாயே நினது 
சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே 

சித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப் 
பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய் 

பெருங்கருணை அரசேநீ தருந்தருணம் இதுவே   
  திருநிலையில் - முதற் பதிப்பு, பொ சு, பி இரா 

3815
முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின் 

முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன் 
தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின் 

தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ 
என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல் 

யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார் 
பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம் 

பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே