3816
விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல் 

விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே 
மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும் 

முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ 
செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில் 

சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே 
பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே 

பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே    
3817
மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே 

மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ 
தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ 

தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள்செய் தேனோ 
நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது 

நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே 
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ 

என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே  
3818
பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே 

பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன் 
ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பேர் 

ஆசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன் 
கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது 

குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன் 
தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா 

தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே    
3819
கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே 

கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான் 
சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது 

திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல் 
விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ 

விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம் 
தொட்டதுநான் துணிந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே 

சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே    
3820
காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது 

கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன் 
கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன் 

கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன் 
சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே 

சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல் 
பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே 

பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே