3821
சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான் 

செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த 
இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற் 

கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம் 
சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல் 

சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை 
நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ்ந் தமைவாய் 

நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே  

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 அனுபோக நிலயம் 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3822
இனிப்பிரிந் திறையும் இருக்கலேன் பிரிவை 

எண்ணினும் ஐயவோ மயங்கிப் 
பனிப்பில்என் உடம்பும் உயிரும்உள் உணர்வும் 

பரதவிப் பதைஅறிந் திலையோ 
தனிப்படு ஞான வெளியிலே இன்பத் 

தனிநடம் புரிதனித் தலைவா 
கனிப்பயன் தருதற் கிதுதகு தருணம் 

கலந்தருள் கலந்தருள் எனையே   
3823
பிரிந்தினிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப் 

பேசினும் நெய்விடுந் தீப்போல் 
எரிந்துளங் கலங்கி மயங்கல்கண் டிலையோ 

எங்கணும் கண்ணுடை எந்தாய் 
புரிந்தசிற் பொதுவில் திருநடம் புரியும் 

புண்ணியா என்னுயிர்த் துணைவா 
கரந்திடா துறுதற் கிதுதகு தருணம் 

கலந்தருள் கலந்தருள் எனையே   
  கருகி - முதற் பதிப்பு, பொ சு, பி இரா, ச மு க 
 கரைந்திடாது - முதற்பதிப்பு, பொ சு, ச மு க 
3824
மேலைஏ காந்த வெளியிலே நடஞ்செய் 

மெய்யனே ஐயனே எனக்கு 
மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம் 

வல்லனே நல்லனே அருட்செங் 
கோலையே நடத்தும் இறைவனே ஓர்எண் 

குணத்தனே இனிச்சகிப் பறியேன் 
காலையே தருதற் கிதுதகு தருணம் 

கலந்தருள் கலந்தருள் எனையே   
3825
பண்டுகொண் டெனைத்தான் பிழைகுறி யாத 

பண்பனே திருச்சிற்றம் பலத்தே 
தொண்டுகொண் டடியர் களிக்கநின் றாடும் 

தூயனே நேயனே பிரமன் 
விண்டுகண் டறியா முடிஅடி எனக்கே 

விளங்குறக் காட்டிய விமலா 
கண்டுகொண் டுறுதற் கிதுதகு தருணம் 

கலந்தருள் கலந்தருள் எனையே