3826
தனித்துணை எனும்என் தந்தையே தாயே 

தலைவனே சிற்சபை தனிலே 
இனித்ததௌ; ளமுதே என்னுயிர்க் குயிரே 

என்னிரு கண்ணுள்மா மணியே 
அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே 

அண்ணலே இனிப்பிரி வாற்றேன் 
கனித்துணை தருதற் கிதுதகு தருணம் 

கலந்தருள் கலந்தருள் எனையே    
3827
துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே 

சோதியுட் சோதியே அழியா 
இன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை 

ஈன்றநல் தந்தையே தாயே 
அன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே 

அண்ணலே இனிப்பிரி வாற்றேன் 
பொன்பதந் தருதற் கிதுதகு தருணம் 

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே   
3828
ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத் 

தென்னைஆட் கொண்டெனை உவந்தே 
ஓதும்இன் மொழியால் பாடவே பணித்த 

ஒருவனே என்னுயிர்த் துணைவா 
வேதமும் பயனும் ஆகிய பொதுவில் 

விளங்கிய விமலனே ஞான 
போதகம் தருதற் கிதுதகு தருணம் 

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே    
3829
எண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத் 

திசைந்தபேர் இன்பமே யான்தான் 
பண்ணிய தவமே தவத்துறும் பலனே 

பலத்தினால் கிடைத்தஎன் பதியே 
தண்ணிய மதியே மதிமுடி அரசே 

தனித்தசிற் சபைநடத் தமுதே 
புண்ணியம் அளித்தற் கிதுதகு தருணம் 

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே    
3830
மலப்பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே 

மந்திர மேஒளிர் மணியே 
நிலைப்பட எனைஅன் றாண்டருள் அளித்த 

நேயனே தாயனை யவனே 
பலப்படு பொன்னம் பலத்திலே நடஞ்செய் 

பரமனே பரமசிற் சுகந்தான் 
புலப்படத் தருதற் கிதுதகு தருணம் 

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே