3846
அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும் 

அப்பநீ அடியனேன் தன்னை 
விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன் 

விடுதியோ விட்டிடு வாயேல் 
உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ 

உன்னருள் அடையநான் இங்கே 
படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப் 

பாடெலாம் நீஅறி யாயோ    
3847
அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே 

அழைத்தனன் அப்பனே என்னை 
எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய் 

எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே 
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் 

பெருந்திறல் சித்திகள் எல்லாம் 
சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன் 

சென்னிதொட் டுரைத்தனை களித்தே   
3848
களித்தென துடம்பில் புகுந்தனை எனது 

கருத்திலே அமர்ந்தனை கனிந்தே 
தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில் 

சிறப்பினால் கலந்தனை உள்ளம் 
தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும் 

தடைபடாச் சித்திகள் எல்லாம் 
அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை 

அடியன்மேல் வைத்தவா றென்னே   
3849
என்நிகர் இல்லா இழிவினேன் தனைமேல் 

ஏற்றினை யாவரும் வியப்பப் 
பொன்இயல் வடிவும் புரைபடா உளமும் 

பூரண ஞானமும் பொருளும் 
உன்னிய எல்லாம் வல்லசித் தியும்பேர் 

உவகையும் உதவினை எனக்கே 
தன்னிகர் இல்லாத் தலைவனே நினது 

தயவைஎன் என்றுசாற் றுவனே   
3850
சாற்றுவேன் எனது தந்தையே தாயே 

சற்குரு நாதனே என்றே 
போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும் 

பூரணா எனஉல கெல்லாம் 
தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த 

தூயபேர் உதவிக்கு நான்என் 
ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம் 

அப்பநின் சுதந்தரம் அன்றோ