3851
சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது 

தூயநல் உடம்பினில் புகுந்தேம் 
இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே 

இன்புறக் கலந்தனம் அழியாப் 
பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப் 

பரிசுபெற் றிடுகபொற் சபையும் 
சிதந்தரு சபையும் போற்றுக என்றாய் 

தெய்வமே வாழ்கநின் சீரே   

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 அழிவுறா அருள்வடிவப் பேறு 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3852
சிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே 
நவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன் 
தவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே 
பவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே    
3853
விளங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே 
களங்க மில்லதோர் உளநடு விளங்கிய கருத்தனே அடியேன்நான் 
விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி வியந்தருள் புரிந்தாயே 
உளங்கொள் இவ்வடி விம்மையே மந்திர ஒளிவடி வாமாறே   
3854
விஞ்சு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே 
எஞ்சல் அற்றமா மறைமுடி விளங்கிய என்னுயிர்த் துணையேநான் 
அஞ்சல் இன்றியே செய்தவிண் ணப்பம்ஏற் றகங்களித் தளித்தாயே 
துஞ்சும் இவ்வுடல் அழிவுறா தோங்குமெய்ச் சுகவடி வாமாறே   
3855
ஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே 
தேங்கு லாவிய தௌ;ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின் 
பாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே 
ஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே