3856
இலங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் இடுகின்ற பெருவாழ்வே 
துலங்கு பேரருட் சோதியே சோதியுள் துலங்கிய பொருளேஎன் 
புலங்கொள் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தனைஇஞ்ஞான்றே 
அலங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறா அருள்வடி வாமாறே   
3857
சிறந்த பேரொளித் திருச்சிற்றம் பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே 
துறந்த பேருளத் தருட்பெருஞ் சோதியே சுகப்பெரு நிலையேநான் 
மறந்தி டாதுசெய் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் புரிந்தாயே 
பிறந்த இவ்வுடல் என்றும்இங் கழிவுறாப் பெருமைபெற் றிடுமாறே  
3858
வயங்கு கின்றசிற் றம்பலந் தன்னிலே வளர்கின்ற பெருவாழ்வே 
மயங்கு றாதமெய் அறிவிலே விளங்கிய மாமணி விளக்கேஇங் 
கியங்கு சிற்றடி யேன்மொழி விண்ணப்பம் ஏற்றருள் புரிந்தாயே 
தயங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாத் தனிவடி வாமாறே   
3859
தீட்டு கின்றசிற் றம்பலந் தன்னிலே திகழ்கின்ற பெருவாழ்வே 
காட்டு கின்றதோர் கதிர்நடு விளங்கிய கடவுளே அடியேன்நான் 
நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி நிறைத்தருள் புரிந்தாயே 
பூட்டும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே   
3860
தடையி லாதசிற் றம்பலந் தன்னிலே தழைக்கின்ற பெருவாழ்வே 
கடையி லாப்பெருங் கதிர்நடு விளங்கும்ஓர் கடவுளே அடியேன்நான் 
இடைவு றாதுசெய் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தாயே 
புடையின் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே