3861
கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே 
மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான் 
ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே 
செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே    

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 பேரருள் வாய்மையை வியத்தல் 
கட்டளைக் கலித்துறை
3862
நன்றே தருந்திரு நாடகம் நாடொறும் ஞானமணி 
மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார்கழலோய் 
இன்றே அருட்பெருஞ் சோதிதந் தாண்டருள் எய்துகணம் 
ஒன்றே எனினும் பொறேன்அருள் ஆணை உரைத்தனனே   
3863
தற்சோதி என்னுயிர்ச் சத்திய சோதி தனித்தலைமைச் 
சிற்சோதி மன்றொளிர் தீபக சோதிஎன் சித்தத்துள்ளே 
நற்சோதி ஞானநல் நாடக சோதி நலம்புரிந்த 
பொற்சோதி ஆனந்த பூரண சோதிஎம் புண்ணியனே  
3864
திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும் 
கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த 
உரைகண்ட தௌ;ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற 
வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே   
3865
மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை 
தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம் 
எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா 
இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே