3866
வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச் 
சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம் 
போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும் 
சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே  
3867
செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே 
இத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய் 
எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை 
வைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே  
3868
ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட 
வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ 
ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே 
ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே   
3869
என்னேஎன் மீதெம் பெருமான் கருணை இருந்தவண்ணம் 
தன்னேர் இலாத அருட்பெருஞ் சோதியைத் தந்துலகுக் 
கன்னே எனவிளை யாடுக என்றழி யாதசெழும் 
பொன்னேர் வடிவும் அளித்தென் உயிரில் புணர்ந்தனனே    
3870
அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான் 
எச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம் 
மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை 
இச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே