3871
வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும் 
வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள் 
வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு 
வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே  
3872
அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம் 

அளித்தெனை வளர்த்திட அருளாம் 
தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த 

தெய்வமே சத்தியச் சிவமே 
இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல் 

ஏற்றிய இன்பமே எல்லாப் 
பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே 

பொதுநடம் புரிகின்ற பொருளே    
3873
சித்தெலாம் வல்ல சித்தனே ஞான 

சிதம்பர ஸோதியே சிறியேன் 
கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த 

கடவுளே கருணையங் கடலே 
சத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன் 

தனக்கறி வித்ததோர் தயையே 
புத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும் 

பொதுநடம் புரிகின்ற பொருளே    
3874
கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக் 

கற்பங்கள் கணக்கில கடப்ப 
நிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா 

நித்திய நிற்குண() நிறைவே 
அலைகளற் றுயிருக் கமுதளித் தருளும் 

அருட்பெருங் கடல்எனும் அரசே 
புலைகள வகற்றி எனக்குளே நிறைந்து 

பொதுநடம் புரிகின்ற பொருளே   

 () நிர்க்குண - முதற்பதிப்பு பொ சு, பி இரா, ச மு க  
3875
தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே 

சத்திய சாத்தியக் கனலே 
ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே 

உலகெலாந் தழைக்கமெய் உளத்தே 
நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே 

நல்கிய ஞானபோ னகமே 
புண்ணிய நிதியே கண்ணிய நிலையே 

பொதுநடம் புரிகின்ற பொருளே