3876
அற்புத நிறைவே சற்புதர் அறிவில் 

அறிவென அறிகின்ற அறிவே 
சொற்புனை மாயைக் கற்பனை கடந்த 

துரியநல் நிலத்திலே துலங்கும் 
சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச் 

செல்வமே சித்தெலாம் புரியும் 
பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே 

பொதுநடம் புரிகின்ற பொருளே   

 () சற்புதர் - நல்லறிவுடையவர்  
3877
தத்துவ பதியே தத்துவம் கடந்த 

தனித்ததோர் சத்திய பதியே 
சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர் 

தமக்குளே சார்ந்தநற் சார்பே 
பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப் 

பெறல்அரி தாகிய() பேறே 
புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து 

பொதுநடம் புரிகின்ற பொருளே   

 () பெரிதரிதாகிய - பொ சு பதிப்பு  
3878
மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த 

விளைவெலாம் காட்டிமெய் வேத 
நூல்வழி காட்டி என்னுளே விளங்கும் 

நோக்கமே ஆக்கமும் திறலும் 
நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும் 

நாயகக் கருணைநற் றாயே 
போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே 

பொதுநடம் புரிகின்ற பொருளே   
3879
அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே 

அரும்பெருஞ் சோதியே சுடரே 
மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே 

மருந்தெலாம் பொருந்திய மணியே 
உலப்பறு கருணைச் செல்வமே எல்லா 

உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே 
புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே 

பொதுநடம் புரிகின்ற பொருளே   
3880
பரம்பர நிறைவே பராபர வெளியே 

பரமசிற் சுகந்தரும் பதியே 
வரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில் 

வயங்கிய பெருஞ்சுடர் மணியே 
கரம்பெறு கனியே கனிவுறு சுவையே 

கருதிய கருத்துறு களிப்பே 
புரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே 

பொதுநடம் புரிகின்ற பொருளே