3881
வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி 

மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே 
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே 

கருணைவான் அமுதத்தெண் கடலே() 
அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி 

ஆனந்த மாம்அனு பவமே 
பொற்புறு பதியே அற்புத நிதியே 

பொதுநடம் புரிகின்ற பொருளே   

 () தண்கடலே - படிவேறுபாடு ஆ பா  
3882
தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம் 

தரவல்ல சம்புவே சமயப் 
புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த 

புண்ணியர் நண்ணிய புகலே 
வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா 

வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே 
பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப் 

பொதுநடம் புரிகின்ற பொருளே    
3883
மூவிரு முடிபின் முடிந்ததோர்() முடிபே 

முடிபெலாம் கடந்ததோர் முதலே 
தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச் 

சத்தியத் தனிநடு நிலையே 
மேவிய நடுவில் விளங்கிய விளைவே 

விளைவெலாம் தருகின்ற வெளியே 
பூவியல் அளித்த புனிதசற் குருவே 

பொதுநடம் புரிகின்ற பொருளே  

 () முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ சு, பி இரா, ச மு க, ஆ பா  
3884
வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும் 

விளம்பிய அனுபவ விளைவும் 
போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள் 

போனது மாய்ஒளிர் புலமே 
ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ் 

விருநிலத் தியல்அருள் ஒளியால் 
பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே 

பொதுநடம் புரிகின்ற பொருளே    
3885
அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை 

அருள்வடி வெடுத்தெழுந் தருளி 
நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி 

நிலைஎலாம் அளித்தமா நிதியே 
மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம் 

வயங்கநல் வரந்தந்த வாழ்வே 
பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே 

பொதுநடம் புரிகின்ற பொருளே