3891
காரண அருவே காரிய உருவே 

காரண காரியம் காட்டி 
ஆரண முடியும் ஆகம முடியும் 

அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே 
நாரண தலமே() நாரண வலமே 

நாரணா காரத்தின் ஞாங்கர்ப் 
பூரண ஒளிசெய் பூரண சிவமே 

பொதுநடம் புரிகின்ற பொருளே   

 () தரமே - முதற்பதிப்பு பொ சு, ஆ பா 

--------------------------------------------------------------------------------

 ஆனந்தானுபவம்
நேரிசை வெண்பா 
3892
கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம் 
வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே 
காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற() 
வாணா நினக்கடிமை வாய்த்து   

 () ஓங்குமறை - படிவேறுபாடு ஆ பா  
3893
காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச் 
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச் 
சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும் 
ஏகா நினக்கடிமை ஏற்று    
3894
மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம் 
யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை 
நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந் 
தாய்க்குத் தனிஇயற்கை தான்    
3895
கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப் 
பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தௌ;ளமுதம் 
தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய் 
எந்தாய் கருணை இது