3896
கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம் 
உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன் 
அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும் 
அழியாச்சிற் றம்பலத்தே யான்    
3897
பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம் 
போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின் 
றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை 
நாடுகின்றேன் சிற்சபையை நான்   
3898
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான் 
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச் 
சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என் 
குற்றம் பலபொறுத்துக் கொண்டு    
3899
கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும் 
கண்டான்() களித்தான் கலந்திருந்தான் - பண்டாய 
நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில் 
வான்மயத்தான் என்னை மகிழ்ந்து   

 () கண்டே - முதற்பதிப்பு பி இரா  
3900
கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம் 
உண்டேன் அழியா உரம்() பெற்றேன் - பண்டே 
எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம் 
தனைஉவந்து கொண்டான் தனை   

 () வரம் - படிவேறுபாடு ஆ பா